அடியேன்

Tuesday, 24 July 2012

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்


நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் 

                 நண்பன் ஒருவனின் பத்து நாள் துரத்தலுக்கும் அவன் செய்த ஐம்பதுக்கும் மேலான போன் கால் இம்சைக்கும் பணிந்து (பயந்து) அவனுடன் ஒரு மீட்டிங்குக்கு செல்ல நேர்ந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த பலர் பலியாடுகளைப் போல விழித்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் ஒருவர் மிரட்டியே கூட்டி வந்திருப்பார் போலும். என் நண்பனைப் பார்த்தேன். 'என்னோடு சேந்து நீயும் கோடீஸ்வரன் ஆகிடுவே..' என்பது போல ஒரு நிச்சயப் பார்வை பார்த்தான். கூட்டத்தின் முன்னே ஒரு வெள்ளைப்பலகை, மார்க்கர், அழிப்பான் இத்யாதிகள்...சில நிமிடங்கள் கரைந்தபின் பலத்த கரகோஷத்தின் இடையே டீக்காக ட்ரெஸ் செய்த ஒருவர் மேடையேறினார். கூட்டத்தை பார்த்து அவர் உதிர்த்த முதல் வாக்கியம், 'வணக்கம் கோடீஸ்வரர்களே ...'. கைதட்டல் விண்ணை பிளந்தது. 
              எனக்கொன்றும் புரியவில்லை. எனக்கென்னவோ வந்திருந்தவர்களில் பல பேர் திரும்பி போவதற்கு பஸ்சுக்கு காசில்லாதவர்களை போலவே தெரிந்தனர், என்னையும் சேர்த்து. அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். 'உங்களில் எத்தனை பேருக்கு கோடீஸ்வரர் ஆவதில் விருப்பம்' என்று அடுத்த கேள்வி. கிட்டத்தட்ட என்னைத்தவிர அனைவருமே கை தூக்கி விட்டிருந்தனர். ஒரு கையை தூக்கிக்கொண்டே என் நண்பன் 'கைய தூக்குடா.. இல்லீனா மதியம் சோறு போடமாட்டாயிங்க' என்பது போல பார்த்தான். மெதுவாக குனிந்து காதருகே என்னிடம் 'உனக்கு பணஞ் சம்பாரிக்க ஆசையில்லையா..ம்ம்?' என்றான். 'இருக்கு' என்றேன். 'பின்னே கையத்தூக்கு' என்றான். 'கையத்தூக்கினா கோடி ரூவா குடுப்பாங்களா' என்றேன். 'ம்க்கும்...' என்று திரும்பி கொண்டான். கிறித்தவ கூட்டங்களில் மேடை மேல் நிற்கும் போதகர்  'அல்லேலூயா' என்று கையைத் தூக்கினால் என்ன ஏது என்று கேட்காமலே கூட்டம் மொத்தமும் கை தூக்கி 'அல்லேலூயா' சொல்லும். அது ஒரு பிரவாக நிலை போன்ற மாயபிம்பம். கிட்டத்தட்ட அது போலவே இங்கும். அவர் பேசப்பேச ஒரு வெளிநாட்டு கம்பெனியின் பொருட்களை (கிட்டத்தட்ட) தெருத் தெருவாக கூவி கூவி விற்க வேண்டிய வேலை என்று எளிதாகவே தெரிந்துவிட்டது. வீடு வீடாக பொருள் விற்கும் ஒருவர் எப்படி கோடீஸ்வரர் ஆக முடியும்? அல்லது எந்த கோடீஸ்வரர் தெருத்தெருவாக போய் பொருள் விற்கிறார்? என இரண்டு கேள்விகள் எட்டிப்பார்த்தது. 
              சிலபல நம்பிக்கை வார்த்தைகளுக்கு பிறகு பொருட்கள் பற்றிய டெமோ ஆரம்பித்தது. அதற்கு இன்னும் இருவர் மேடையேறினர். ஒருவர் கையில் பத்து டாஸ்மாக் கிளாஸ் வைத்திருந்தார். 'சரக்கும் உண்டாடா? பரவாயில்லையே' என்று நண்பனிடம் கேட்டேன். 'டெமோ காட்டுவாங்க பாரு' என்றான். ஒரு பிளாஸ்டிக் கிளாசில் தண்ணீர் ஊற்றி அரிசி போட்டார்கள். ஒரு கருந்திரவத்தை ஊற்றினார்கள். கிளாசை தூக்கி காட்டினார்கள். 'பார்த்தீர்களா... அரிசி கருப்பாகி விட்டது' என்றனர். 'நீயி தானடா கருப்பா எதையோ ஊத்தினே..' என்று வாய் வரை வந்ததை உமிழ் நீரோடு சேர்த்து விழுங்கிவிட்டேன். நமக்கேன் வம்பு. பின் அவர்கள் கம்பெனி தயாரிப்பான ஒரு மாத்திரையை உள்ளே போட்டு கலக்கினர். அந்த கருப்பு நிறம் அப்படியே மாறி வெள்ளையாகி விட்டது. கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இந்தாளு மந்திரவாதியோ??. பின் இரண்டு சிறிய தெர்மோகூல் எடுத்து. புழக்கத்தில் உள்ள பிரபல கம்பெனியின் (மீன் மாத்திரை?!) திரவ மாத்திரையை எடுத்து ஊசியால் குத்தி ஒரு  தெர்மோகூல் மீது ஊற்றினார். பின்  அவர்கள் கம்பெனி திரவ மாத்திரையை குத்தி எடுத்து அடுத்த தெர்மொகூலில்  ஊற்றினர். இரண்டு நிமிடங்கள் கழித்து இரண்டு தெர்மொகூலையும் எடுத்து காட்டினர். பிரபல கம்பெனி தெர்மோகூல் ஓட்டையாகி விட்டிருந்தது. 'பார்த்தீர்களா?? இதை நீங்கள் உட்கொண்டால் உங்கள் வயிறும் இப்படி தான் ஓட்டையாகி விடும்' என்று எச்சரித்தனர். இன்னும் நிறைய டெமோக்கள் ஓடின. நாம் உபயோகிக்கும் முகப்பூச்சு பவுடரையும் அவர்கள் கம்பெனி தயாரிக்கும் பவுடரையும் தனித்தனி தண்ணீர் கிளாஸ்களில் கொட்டினர். முன்னது கரையவே இல்லை. பின்னதோ அழகாகக் கரைந்திருந்தது. ஒரு தேர்ந்த மந்திரவாதியின் லாவகம் அவர்களின் அனைத்து வேலைகளிலும் இருந்தது. சிறு பிசிறு கூட இல்லை. கூட்டத்தினரின் வாய் முன்னிலும் அதிகமாக பிளந்திருந்தது. டெமோ முடிந்தது. மீண்டும் அவர் பேச ஆரம்பித்தார். 'இப்போ சொல்லுங்க. இந்த பொருள் தரமானது தானே? உங்க கண் முன்னாலே டெமோ காட்டிட்டோம்.' என்றவுடன் கூட்டம் அவசர அவசரமாக ஆமோதித்தது. பொருள் ஓகே தான். ஆனா நான் கோடீஸ்வரர் எப்படி ஆகிறது என்ற என் பழைய கவலைக்கே தாவினேன். 
                கையேடு போன்ற ஒன்றை விநியோகித்தனர். அதை சிறிது மேய்ந்தேன். ஒரு இடத்தில் என் கண்கள் நிலை குத்தின. அது அப்பொருட்களுக்கான விலைப்பட்டியல். ஒவ்வொரு பொருளும் சந்தையில் உள்ள விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கும் மேல். 'டேய்!! என்னடா ரேட் இது...? இந்த விலையில வித்தா அந்த கம்பெனி ஓனர் வேணா கோடீஸ்வரன் ஆவலாம். நாம எப்படிடா ஆவமுடியும்.?' என்று நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவன் 'அமைதியா இரு' என்று சைகை செய்தான். அதற்கு மேடை மேலிருந்தவரே பதில் சொன்னார். வழக்கமாக நாம் உபயோகிக்கும் அளவில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உபயோகித்தால் போதுமாம். ஏதோ உங்க லாஜிக் சரி. அந்த கோடீஸ்வர மேட்டர்?? சுத்தி சுத்தி நான் அதிலேயே வந்து நின்றதற்கு காரணம் என் நண்பன் இந்த பொருட்கள், வியாபாரம், டெமோ என்றெல்லாம் ஏதும் சொல்லிக்கூட்டி வரவில்லை. கோடீஸ்வரன் ஆகலாம் என்று மட்டுமே சொல்லிக்கூட்டி வந்திருந்தான். 

             இப்போது மேடை நாயகர் மார்க்கடிங் பற்றிய விஷயங்கள் பேச ஆரம்பித்திருந்தார். அவர் ஒரு கால்நடை மருத்துவராம். ஆறேழு வருடங்கள் முன்பு அவர் இப்படித்தான் இரண்டு மூன்று பைகளை சுமந்து திரிந்தாராம். இப்போது கம்பெனி கார் பரிசு வென்றுள்ளாராம். (கைதட்டல்) அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டாராம். (கைதட்டல்) ஒரு தடவை டெல்லி டூர் பரிசை வென்றிருக்கிறாராம். (கைதட்டல்) இன்னும் மூன்று மாதங்களில் அவர் குறிப்பிட்ட விற்பனையை எட்டி விட்டால் சிங்கப்பூர் டூர் பரிசையும் வென்று விடுவாராம். (பலத்த கைதட்டல்). 'ஓ!! நீயி சிங்கப்பூர் போறதுக்கு தான் எங்கள கூட்டி வந்து உக்கார வச்சிருக்கியா' என்று கேட்கத் தோன்றியது. இவர் ஓடாகத்தேய்ந்து உழைத்த இந்த ஆறு வருடத்தில் நாள் ஒன்றுக்கு வெறும் நான்கு ரூபாய் சேர்த்து வைத்திருந்தாலும் (அதாவது தினம் ஒரு டீ குடிக்கும் காசு தான்) இவர் காசிலேயே டெல்லி (அதுவும் பிளைட்டிலேயே) போய் வந்திருக்கலாமே என்று கேட்க நினைத்தேன். இவர் ஒரு கால்நடை மருத்துவர். அதனால் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சேர்த்து வைப்பது என்பது சாதாரணம் தான். அவ்வாறு சேர்த்து வைத்திருந்தாலே இவர் சொந்த காசிலேயே சிங்கப்பூர் போய் வந்திருக்கலாமே என்ற சின்ன லாஜிக்கைக்கூட யோசிக்காமல் எப்படி இப்படி கைவலிக்க கைத்தட்டுகிறார்கள் என்று வியந்தேன். இவர் ஒருவர் உழைப்பிலேயே நிவர்த்தியாகி விடக்கூடிய சொகுசு, சலுகைகளை 'வெளிநாட்டுப் பொருள் விற்க ஆள் சேர்த்து விடுகிறேன் பேர்வழி' என்று ஒரு பாவப்பட்ட கூட்டத்தையே இவர் பின் சேர்த்து அவர்கள் உழைப்பில் இவர் சிங்கப்பூர் செல்வது பெருமையா?? என்றெல்லாம் யாரும் யோசித்ததாகவே தெரியவில்லை. இதில் அவர் டெல்லி போனதையும், இவரின் அப்லைன் சீனியர் ஒருவர் சுவிச்சர்லாந்து போனதையும் வீடியோ காட்சிகளாக வேறு போட்டு காட்டினார்கள். வாயில் எச்சூறியபடியே மொத்தக் கூட்டமும் கண்டு களித்தது. 'உங்களில் அடுத்து என்னுடன் யார்யாரெல்லாம் ஆஸ்த்திரேலியா வரப்போகிறீர்கள்' என்று அடுத்து அவர் கேட்ட கேள்விக்கு களிப்புடன் பலமாக கைதட்டிக் கொண்டிருந்த கூட்டத்தினரை கவனித்து பார்த்ததில் ஒன்று புரிந்தது. 
             வந்திருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் நடுத்தரமக்களே. அவர்களுக்கு எட்டாக்கனியாக, பகல்கனவாக இருக்கும் வெளியூர்/வெளிநாடு சொகுசு பயணங்களும், யாரோ உழைப்பதில் தனக்கு வருமானம் வந்து விடும் என்ற நப்பாசையும் தான் இவர்களை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபாடு கொள்ள வைக்கிறது. இவ்வளவுக்கும் பிசினஸ் விஷயம் என்று இந்த ஆள்பிடிக்கும் நெட்வொர்க்கை பற்றி மேடைநாயகர் பேச ஆரம்பித்த பிறகு, பொருட்கள் பற்றிய பேச்சை மறந்தும் எடுக்கவே இல்லை. அவர் குறிக்கோள் முழுவதுமே ஆள் பிடிப்பதிலேயே இருந்தது தெளிவாகத் தெரிந்தது. 'ஐயாயிரம் முதலீட்டில் நீங்கள் கோடீஸ்வரன்' என்பதே அவரின் அஸ்திரமாக இருந்தது.  இவர் சொல்வதை நம்பி இதில் சேர்ந்து ஆளுக்கு ஐயாயிரம் கட்டினால் கூட இந்த கூட்டத்திலிருந்து மட்டுமே கம்பெனி லாபம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை தாண்டுகிறது. இந்த ஐம்பது பேர்களில் எத்தனை பேர் திறமையாக ஆட்களை சேர்த்து விட முடியும்? எனக்கும் என் நண்பனுக்கும் பொதுவான ஒரு நண்பனை, நானும் சேர்க்க நினைப்பேன், அவனும் சேர்க்க நினைப்பான். ஒரு கட்டத்தில் saturation பாயிண்ட்டை எட்டிவிடுவோம். பின் அனைவரும் புறங்கையை நக்கிக்கொண்டு நிற்க வேண்டியதுதான். உள்ள தொழிலும் போச்சு. வேலையும் போச்சு. நம்மைப்பார்த்தாலே ஏதோ பிள்ளை பிடிக்கிறவன் ரேஞ்சுக்கு பயந்து எல்லாரும் ஓடிவிடுவார்கள். 

            ஒன்றை எல்லாரும் புரிந்து கொள்ளல் நலம். கோடீஸ்வரன் ஆகிவிடலாம் போன்ற பிரகாசமான வாய்ப்புகள் ஒருபோதும் நம் வீடு தேடிவராது. ஐயாயிரம் மட்டும் முதலீடு ண்ணினால் போதும், பின் நாம் அறிமுகப்படுத்துபவர்கள் மூலம் அது குட்டி, போட்டு குட்டி போட்டு  லட்சங்களாகவும் கோடிகளாகவும் ஆகிவிடும் என்றால்,கோடிக்கணக்கான ரூபாயை கருப்பு பணமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இதில் சேர்ந்து அவ்வளவையும் வெள்ளையாக மாற்றிவிட மாட்டார்களா?? சிட்பண்டுகள், பைனான்சுகளில் இழந்தது போக மீதமிருக்கும் பணத்தை இது போன்றவற்றில் இழந்தே தீருவோம் என்று வரிசை கட்டி நிற்கும் நடுத்தர மக்களை  என்ன  செய்வது??  இந்த MLM எனப்படும் Multi Level Marketing பற்றி பேச/எழுத/விவாதிக்க இன்னும் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. இக்கூட்டங்களுக்கு போவதோ, ஏன் இதைப் பற்றி  பேசுவதே  நேர விரயம் தான். 

வணக்கங்களுடன் 
டேவிட் 

Thursday, 19 July 2012

நானும் குழந்தை

மகளின் சேட்டைகளை சிரித்தபடி பார்த்து கொண்டிருக்கும் என்னிடம் (பாஷா ஸ்டைலில்) என் மனைவி கேட்கிறாள் 'உங்களுக்கு கோபமே வராதா...?'