அடியேன்

Tuesday, 30 October 2012

குடைச்சல் கேள்விகள் - 1


சின்மயி - ராஜன் விவகாரத்தின் பின்னணி தெரிந்தும் அமைதியாக இருக்க முயற்சித்தாலும், சில நிகழ்வுகள் நம் வாயை கிளறிவிடுகின்றன. இப்பதிவு நேற்று மகேஷ் மூர்த்தி - சின்மயி இடையே ட்விட்டரில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதம் பற்றியது. இது பற்றிய முந்தைய விஷயங்கள் (அ) ஹிந்துஸ்தான் டைம்ஸ் வகைமை பற்றி தெரியாதோர் இதை ஒரு தடவை படித்துவிடுங்கள்


Followers எண்ணிக்கையில் ராஜன் வேண்டுமானால் மிக பின்தங்கி இருந்திருக்கலாம். ஆனால் PII score என்ற அளவீட்டில் சின்மயிக்கு அடுத்த இடத்தில் இருந்தார். (Chinmayi - 59 ; Rajan - 58.3).  PII score அளவீட்டின் படியே வரிசைப்படுத்தி இருந்தார் மகேஷ். Followers படி வரிசைப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு முந்தைய POLITICS என்ற தலைப்பில் வெறும் 50,000 followers கொண்ட சுப்பிரமணியம் சுவாமிக்கு மூன்றாவது இடமும், கிட்டத்தட்ட 5 Lakh followers கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நான்காவது இடம் கொடுத்திருந்தார். அதுவும் அதே PII Score அளவீட்டின்படி தான். ''சுவாமியை எப்படி எனக்கு முன் நீங்கள் வைக்கலாம்'' என்று மோடி ஆர்பாட்டம் செய்தாரா?? சொல்லப் போனால் இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.  ஆனால் ராஜன் போன்ற ஒரு சாதாரணன் உடன் இருப்பதை தாங்க முடியாமல் அவனை நீக்கச்சொல்லி போராடினார் சின்மயி. போதாக்குறைக்கு மதன் கார்க்கியை அவ்விடத்திற்கு சிபாரிசு வேறு செய்தார். ஆனால் தான் அவ்வாறு சொல்லவே இல்லை என்றுவேறு சாதித்து கொண்டிருந்தார். இவை பழைய நிகழ்வுகள். 

நேற்று திடீரென்று மீண்டும் ட்விட்டரில் அதே பிரச்சினைக்காக அதே மகேஷ்மூர்த்தியும் சின்மயியும் மோதிக்கொண்டது தான் பரபரப்பு ... 

*) 'உங்களையோ ராஜனையோ எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் ராஜன் பெயரை நீக்கச்சொன்னது நீங்கள். ராஜன் அவ்வாறு என்னிடம் எதுவும் கூறவே இல்லை'

*) 'நீங்கள் ராஜனை அவ்வகைமையில் இருந்து நீக்கச் சொன்னது தான் உண்மை' 

என்ற ரீதியில் ஆரம்பித்து...

*) வேண்டுமானால் காவல்துறையையும் ஊடகத்தையும் நீங்கள் திசைதிருப்பலாம். இணையத்திலுள்ளவர்களை ஏமாற்ற முடியாது'

*)    'தமிழ்நாடு காவல்துறை/வக்கீல்கள் கவனத்திற்கு... சின்மயி ஒரு பொய்யர்',  

*)    'ஏன் ராஜனை பொய்யுரைத்து காவல்துறையிடம் மாட்டிவிட்டீர்கள்' 

...என்று பொரிந்து தள்ளிவிட்டார். இதில் உச்சகட்டமாக மகேஷ் மூர்த்தி, சின்மயியை 'IDIOT' , 'FOOL'  என்றெல்லாம் வசைபாடி விட்டார். ஆச்சர்யமாக சின்மயி இதற்கு ' Please use your words carefully Mr.Muthy ' என்று ஒரே வரியில் முடித்துகொண்டார். 



இதில் என்னை குடையும் கேள்வி என்னவெனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இவ்வாறு சகட்டுமேனிக்கு வசைபாடியவரின் மீது சின்மயி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?? (ராஜன் நேரடியாக இப்படி திட்டியதாக கூட இன்றுவரை ஒரு சான்றும் அவர்கள் காட்டவில்லை) 

அடுத்து, கமிஷனரிடம் புகார் கொடுத்தது பற்றி 'பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு' என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்ட பொழுது, 'நாங்கள் அவ்வாறு செய்தி கொடுக்கவில்லை. அவர்களாகவே திரித்து போட்டுகொண்டனர்' என்று இணையத்தில் விளக்கம் சொன்னாரே தவிர அந்த பத்திரிகையிடம் நீங்கள் திரித்துப் போட்டு விட்டீர்கள்  என்று தெரிவிக்கவுமில்லை, அப்பத்திரிக்கையும் அச்செய்தியை இன்று வரை மறுக்கவுமில்லை. சின்மயியும் அப்பத்திரிகை மீது எவ்வித நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கவில்லை... ஏன்?? 

அது போலவே, ராஜ் டிவி யில் 'கோப்பியம்' நிகழ்ச்சியின் அறிமுக உரையில் பிரபல பாடகியையை ஆபாசமாக மார்பிங் செய்ததாகவும், இன்னும் என்னவெல்லாமோ கட்டுக்கதைகளை சொல்லி இவர் தான் அதை செய்தவர் என்று சின்மயி சொன்னதாக சொல்லி,  ராஜனை காட்டுகின்றனர்.இந்நிகழ்ச்சிக்கும் சின்மயி மறுப்பேதும் சொல்லவில்லை. அப்படிஎன்றால் ராஜ் டிவிக்கு அவர் அவ்வாறு தான்  பேட்டியளித்தாரா? பத்திரிகைக்கு காட்டிய சிறு எதிர்ப்பை கூட டிவிக்கு காட்டவில்லை. ஏன்??


(ராஜனின் மனைவி பேரை வேறு மாற்றிவிட்டார்கள். அந்த லட்சணத்தில் புலனாய்வு செய்கிறார்கள் புலனாய்வுப் புலிகள்)

ஆக நம் கண்முன்னே அவரை வசைபாடுபவர்களையும், திரித்து எழுதி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்களை சின்மயி கண்டுகொள்ளாமல்/பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறார் (அ) மன்னித்து விடுகிறார். ஆனால் ராஜன் மேல் மட்டும் ஏன் கைது நடவடிக்கை என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை?? வெறும் மூவாயிரம்  followers மட்டுமே வைத்திருக்கும் அவரை தனக்கு சரிசமமாக நினைக்க மனம் ஒப்பவில்லையா?? அல்லது அவரை கைது செய்தால் சொந்தபந்தம்  என்று யாருமே கேள்வி கேட்க வரமாட்டார்கள் என்ற எண்ணமா?? 

'எந்தவித Backgroundம் இல்லாத / வசதியில்லாத ஒரு மாதச்சம்பளக்காரன் நம்மை எதிர்த்து பேசிவிட்டான். அவனை சும்மா விடுவதா' என்ற எண்ணமல்லாது வேறேது?? 

சரி. புகார் கொடுத்ததையாவது நேர்மையாக கொடுத்தாரா? ராஜன் பல்வேறு தருணங்களில் பல்வேறு காரணங்களுக்காக பேசிய சில முகம் சுழிக்கவைக்கும் ட்விட்டுக்களை தேடிப் பொறுக்கி எடுத்து கொடுத்துள்ளார். அதாவது 'ராஜன் இவ்வளவு கெட்டவன்' என நிறுவ முயற்சிக்கும் தந்திரோபாயம். சரி.. ராஜனை போல ஒரு கடைந்தெடுத்த பொறுக்கி சமூகத்தில் உலவுவது எல்லா பெண்களுக்கும் அபாயம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம். அவரிடம் 'ராஜன் மட்டும் தான் இணையத்தில் அப்படி பேசித் திரிகிறானா??' என்று கேட்டால் 'நான் பார்த்தவரைக்கும்' என்ற பதில் கூட வரலாம். மேலும் ராஜன் மட்டுமல்லாது ராஜனின் ஆதரவாளர்கள் பேசிய/ஏசிய பேச்சுக்களுக்கும் ராஜனே பொறுப்பு என்றும் சொல்லிவிட்டார். இருக்கட்டும். 

கீழே காணும் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளது சின்மயி அவர்களின் பதிவில் இடப்பட்ட காமன்டுகளே. 






எவ்வளவு நாகரீகம்?? ராஜன் ஆதரவாளர்கள் பேசியவைக்கு ராஜன் பொறுப்பு என்றால் சின்மயி ஆதரவாளர்கள் பேசியதற்கு யார் பொறுப்பு?? இவ்வளவு வக்கிரமாக பேசும் இந்த  நபர்கள் மட்டும் என்ன  சமூகத்திற்கு நலன் விளைவிப்பவர்களா?? இவர்கள் மேல் ஏன் வழக்கு போடவில்லை??. அட.. வழக்கு போடவேண்டாம். ஒரு வார்த்தை. 'வக்கிரமாக பேசாதீர்கள்' என்றாவது சொன்னாரா?? அப்போ ராஜனுக்கும் சின்மயிக்கும் என்ன வித்தியாசம்?? 

தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை உடனே கெட்டவன் என நிரூபிக்கவே பார்க்கிறார். அதற்கு மற்றுமொரு உதாரணம். மகேஷ்மூர்த்தி க்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் முடிந்த சில நிமிடங்களில் வேறுயாரோ மகேஷ்மூர்திக்கு எதிராக எழுதிய ஒரு ட்விட்டை எங்கேயோ தேடிப்பிடித்து உடனே அந்த ட்விட்டை RT செய்கிறார். 



''என்னை குறை சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும்  யோக்கியனில்லை'' என்று நிறுவ முயற்சிப்பதே அவருடைய attitude. இதைத்தான் ராஜன் விஷயத்திலும் பெரிய அளவில் நடத்திக்காட்டி கொண்டிருக்கிறார். நியாயமாக அவரை harassment செய்திருந்தாலோ மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தாலோ அது சம்பந்தமான வழக்கு தொடுப்பதோடு, அது சம்பந்தமான ஆதாரங்களை தானே கொடுக்கவேண்டும். இதென்ன குறுக்குப்புத்தி?? 
.
.
.
டிஸ்கி :-  ராமாயணத்தில் 'வாலி'யின் நேரெதிர் நின்று போர் புரிந்து அவரை வெல்லமுடியாது என்று, நீதி(!)யை நிலைநாட்ட மறைந்திருந்து கொன்றாராம் ராமன். 'சுக்ரீவன்' துணையோடு...
ஆனால் இன்றும் வாலியைத்தான் 'வீரன்' என்று போற்றுகின்றனர். 

Thursday, 23 August 2012

கிராமத் தேனிலவு (1)


கூந்தப்பனைபட்டி - பாகம் 1

.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து பதினோரு கிலோமீட்டர் தாண்டினால் பாப்பான்குளம்அடுத்த இரண்டு கிலோமீட்டரில் செல்லப்பிள்ளையார்குளம்அதற்கடுத்து ஊர் தான் கூந்தப்பனைபட்டிஊர் என்று கூட சொல்லமுடியாதுகிராமம்அதுவும் குக்கிராமம்நூறு நூற்றைம்பது வீடுகள் தான் இருக்கும்நான் பிறந்து எட்டு வயது வரை வளர்ந்தெல்லாம் அங்கே தான்அப்பா பார்த்து கொண்டிருந்த மதுராகோட்ஸ் கம்பெனி VRS கொடுத்து அவரை அனுப்பியதும் என்ன நினைத்தாரோசொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு எங்களையும் சென்னை கூட்டி வந்துவிட்டார்சென்னையிலே பள்ளிப்படிப்பு முடித்து மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், கேம்பஸில் கிடைத்த கம்பெனி வேலை, டெல்லி டிரான்ஸ்பர் என முழு நகரவாசியாகவே மாறிவிட்டேன்அப்பா சென்னையை விட்டு வரவே இல்லைடெல்லி பேச்சிலர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர இரண்டு மாதங்கள் முன்பு தான் சஞ்சனா இணைந்தாள்டெல்லி வாழ் தமிழ் குடும்பம்கிட்டத்தட்ட காதல் கல்யாணம் தான்வேலைக்குப் போன புதிதில் சக தமிழர் என்ற முறையில் அறிமுகம்ஆரம்பத்தில் ஆபீஸ் வேலைகளில் அவள் தான் எல்லா உதவியும் செய்தாள்நட்பு காதலாகிகல்யாணமாகியதுஅப்பா ஒன்றுமே சொல்லவில்லைஉன் இஷ்டம் என்று ஒதுங்கிக்கொண்டார்இப்போதும் சஞ்சனாவுக்கு தமிழ் சரியாக வாசிக்கத் தெரியாது.  ஆனால் சரளமாகப் பேசுவாள்

             திருமணம் முடிந்து இரண்டுமுறை தேனிலவு பிளான் கேன்சலாகிவிட்டது. ஒருவழியாய் நாற்பது நாட்கள் கழித்து கிளம்பிவிட்டோம். சென்னை வந்திருக்கும் போது அப்பா 'ஏண்டா நீ கிராமத்துக்கு போய் எவ்ளோ நாள் இருக்கும்' என்று சாதாரணமாக கேட்ட ஒரு கேள்வி தான் இப்போது கூந்தப்பனைபட்டி பயணக்காரணம். சஞ்சனாவுக்கும் கிராமம் பார்க்க ஆசை. படிப்பு, வேலை, அலைச்சல் என்று காலப்போக்கில் கூந்தப்பனைபட்டியை மறந்தே விட்டிருந்தேன். 20 வருடங்கள் கழித்து ஒரு பால்ய நண்பனைப் பார்க்கும் ஆவலோடு போய்க்கொண்டிருக்கிறேன். நெருங்க நெருங்க பல கலவையான நினைவுகள்... பாம்படம் தோளுரச சுற்றும் எச்சுமி பாட்டி .. தாமோதரன் சித்தப்பா .. விளையாடவும் வயல் போகவும் மாட்டுவண்டி .. பழையசோறு தொட்டுக்க சின்ன உள்ளி .. மிளகா .. ஒரே ஒரு லைப்ரேரியன், தூங்குமாரி .. இரவ, கமலை, நுங்கு வண்டி... இன்னும் என்னன்னவோ நினைவலைகள் மனக்கரையில் மோதின. ம்ம்ம்... அப்புறம் வாத்தியார் முருகேசு, முருகாயி அத்தை.

'முக்கூடல் 20 கி.மீ' என்ற போர்டு வண்டியை வலது பக்கமும், சஞ்சனாவின் கேள்வி நினைவுகளை நிகழ்காலத்திற்கும் திருப்பி விட்டது. 

"என்னிக்கு ரிட்டர்ன் செல்வம்?"

"இங்கே ஜஸ்ட் டூ டேஸ். போகும் போது அப்படியே கொடைக்கானல் போலாம்... 'll have our final touch there?'' கண் சிமிட்டினேன். 

"அய்யே வழியுது... தொடச்சிக்கோங்க" என்றாள் வெட்கச்சிரிப்போடு

வழியெங்கும் இருபக்கமும் வரிசையாக புளியமரங்கள். மாடு மேய்க்கும் சிறுவர்கள் மரத்திலும், மாடுகள் ரோட்டிலும் நின்றன. இரண்டு தடவை ஹார்ன் அடித்ததும் தான் உணர்வு வந்தவர்களாய் குதித்து "ஹேய் ஹேய்.." என்று பலங்கொண்ட மட்டும் கம்பால் அடித்து மாடுகளை ஓரம் விரட்டினர்.

"மாடு மேய்க்கிறத வுட்டுபிட்டு மரத்துல ஏறி மசுராடா புடுங்கிறீங்க??" என்றார் மர நிழலில் நுங்கு விற்கும் அந்த கிழவர். 

"வாட்ஸ் திஸ்??" ரோட்டோரம் இருந்த நுங்குகளைப் பார்த்துக் கேட்ட சஞ்சனாவிடம்

"இட்ஸ் கால்டு நுங்கு. பனைமரத்து காய். . ஐ மீன் பாம்ட்ரீ" என்று ஒருவழியாக புரிய வைத்தேன். 

"சாப்பிடலாமா" என்றாள்

வண்டிக்கும் சிறிது ஓய்வு வேண்டியதோ என்னவோ, அதுவாகவே இடது புறம் திரும்பியது. நிறுத்தி இறங்கினோம் 

"வெரி ஹாட் னா??" கேட்டபடி சன்கிளாஸ் அணிந்து கொண்டாள்

மாடு மேய்க்கும் சிறுவர்கள் "யாருலே இது!! தமன்னா கணக்கா இருக்கா. ஹிஹி!" என்றது என் காதில் கேட்டது. சஞ்சனா கிட்டத்தட்ட அவளைப்போலத்தான் இருப்பாள். என்ன, அவ்வளவு வெளேர் கிடையாது. திரும்பி அவர்களைப் பார்த்ததும் ஓடிவிட்டனர். "என்னவாம்" என்று பார்வையாலே கேட்ட சஞ்சனாவிடம் " நத்திங்" என்று சிரித்தேன். 

அதற்குள் "நல்ல இள நொங்கு மா ... வேனலுக்கு நல்லது" என்று சஞ்சனாவிடம் நுங்கு தாத்தா மார்கட்டிங் ஆரம்பித்திருந்தார். "எப்படி சீவி மட்டும் தரவா? கண்ணெடுத்து தரவா?" என்றதும் சஞ்சனா என்னை பார்த்தாள்.

"இல்ல சீவி மட்டும் குடுங்க" என்றேன். நுங்கை சீவி அப்படியே சாப்பிடும் சுகம் கண்ணாக  வெட்டி சாப்பிடுவதில் இருக்காது. ஒரு நுங்கை சீவி சஞ்சனா கையில் கொடுத்தார். 

"ஹேய் செல்வம்!! இதென்ன பார்க்கிறதுக்கு பவுலிங் பால் மாதிரியே இருக்கு...எப்படி சாப்பிடறது?? வித் ஸ்பூன்??'' பெரிதாகச் சிரித்தபடி நுங்கை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆம். சீவிய நுங்கு மூன்று கண்ணுடன் பார்ப்பதற்கு பவுலிங் பால் மாதிரியே தான் இருக்கும்.

"ஸீ ஹியர்" என்றபடி அவளுக்கு டெமோ காட்டினேன். "தம்ப் ஃபிங்கர் தான் ஸ்பூன். அத வச்சு தோண்டி இத மாதிரி சாப்பிடனும்" என்றேன். நுங்கை தோண்டியவுடன் பீரிட்டு அடிக்கும் நீரின் சுவையே அலாதி தான். "வெரி நைஸ்" என்றபடியே கொஞ்சம் கீழே கொட்டியபடி கூதுகலமாய் சாப்பிட்டு முடித்தாள். "அவுரேக்??" என்றதற்கு "எனஃப் எனஃப்" என்றாள். 

காசு கொடுத்துவிட்டு கிளம்பும் போது சஞ்சனா நாப்கினை வைத்து கழுத்துக்கு கீழே துடைத்துக் கொண்டிருந்தாள். "எனி ஹெல்ப்?" என்றதற்கு சிரித்தபடி "போடா..." என்றாள் 

"முக்கூடல் இன்னும் எவ்ளோ தூரம் தாத்தா??"

"நேரே போங்க.. ஒரு நாலு பர்லாங் இருக்கும். அவ்ளோதான்.."

கிளம்பும் வரை நுங்கு தாத்தா சிரித்துக் கொண்டே இருந்தார். சஞ்சனா சாப்பிட்ட அழகு அப்படி
.
.

(தொடரும்...)

Tuesday, 24 July 2012

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்


நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் 

                 நண்பன் ஒருவனின் பத்து நாள் துரத்தலுக்கும் அவன் செய்த ஐம்பதுக்கும் மேலான போன் கால் இம்சைக்கும் பணிந்து (பயந்து) அவனுடன் ஒரு மீட்டிங்குக்கு செல்ல நேர்ந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த பலர் பலியாடுகளைப் போல விழித்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் ஒருவர் மிரட்டியே கூட்டி வந்திருப்பார் போலும். என் நண்பனைப் பார்த்தேன். 'என்னோடு சேந்து நீயும் கோடீஸ்வரன் ஆகிடுவே..' என்பது போல ஒரு நிச்சயப் பார்வை பார்த்தான். கூட்டத்தின் முன்னே ஒரு வெள்ளைப்பலகை, மார்க்கர், அழிப்பான் இத்யாதிகள்...சில நிமிடங்கள் கரைந்தபின் பலத்த கரகோஷத்தின் இடையே டீக்காக ட்ரெஸ் செய்த ஒருவர் மேடையேறினார். கூட்டத்தை பார்த்து அவர் உதிர்த்த முதல் வாக்கியம், 'வணக்கம் கோடீஸ்வரர்களே ...'. கைதட்டல் விண்ணை பிளந்தது. 
              எனக்கொன்றும் புரியவில்லை. எனக்கென்னவோ வந்திருந்தவர்களில் பல பேர் திரும்பி போவதற்கு பஸ்சுக்கு காசில்லாதவர்களை போலவே தெரிந்தனர், என்னையும் சேர்த்து. அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். 'உங்களில் எத்தனை பேருக்கு கோடீஸ்வரர் ஆவதில் விருப்பம்' என்று அடுத்த கேள்வி. கிட்டத்தட்ட என்னைத்தவிர அனைவருமே கை தூக்கி விட்டிருந்தனர். ஒரு கையை தூக்கிக்கொண்டே என் நண்பன் 'கைய தூக்குடா.. இல்லீனா மதியம் சோறு போடமாட்டாயிங்க' என்பது போல பார்த்தான். மெதுவாக குனிந்து காதருகே என்னிடம் 'உனக்கு பணஞ் சம்பாரிக்க ஆசையில்லையா..ம்ம்?' என்றான். 'இருக்கு' என்றேன். 'பின்னே கையத்தூக்கு' என்றான். 'கையத்தூக்கினா கோடி ரூவா குடுப்பாங்களா' என்றேன். 'ம்க்கும்...' என்று திரும்பி கொண்டான். கிறித்தவ கூட்டங்களில் மேடை மேல் நிற்கும் போதகர்  'அல்லேலூயா' என்று கையைத் தூக்கினால் என்ன ஏது என்று கேட்காமலே கூட்டம் மொத்தமும் கை தூக்கி 'அல்லேலூயா' சொல்லும். அது ஒரு பிரவாக நிலை போன்ற மாயபிம்பம். கிட்டத்தட்ட அது போலவே இங்கும். அவர் பேசப்பேச ஒரு வெளிநாட்டு கம்பெனியின் பொருட்களை (கிட்டத்தட்ட) தெருத் தெருவாக கூவி கூவி விற்க வேண்டிய வேலை என்று எளிதாகவே தெரிந்துவிட்டது. வீடு வீடாக பொருள் விற்கும் ஒருவர் எப்படி கோடீஸ்வரர் ஆக முடியும்? அல்லது எந்த கோடீஸ்வரர் தெருத்தெருவாக போய் பொருள் விற்கிறார்? என இரண்டு கேள்விகள் எட்டிப்பார்த்தது. 
              சிலபல நம்பிக்கை வார்த்தைகளுக்கு பிறகு பொருட்கள் பற்றிய டெமோ ஆரம்பித்தது. அதற்கு இன்னும் இருவர் மேடையேறினர். ஒருவர் கையில் பத்து டாஸ்மாக் கிளாஸ் வைத்திருந்தார். 'சரக்கும் உண்டாடா? பரவாயில்லையே' என்று நண்பனிடம் கேட்டேன். 'டெமோ காட்டுவாங்க பாரு' என்றான். ஒரு பிளாஸ்டிக் கிளாசில் தண்ணீர் ஊற்றி அரிசி போட்டார்கள். ஒரு கருந்திரவத்தை ஊற்றினார்கள். கிளாசை தூக்கி காட்டினார்கள். 'பார்த்தீர்களா... அரிசி கருப்பாகி விட்டது' என்றனர். 'நீயி தானடா கருப்பா எதையோ ஊத்தினே..' என்று வாய் வரை வந்ததை உமிழ் நீரோடு சேர்த்து விழுங்கிவிட்டேன். நமக்கேன் வம்பு. பின் அவர்கள் கம்பெனி தயாரிப்பான ஒரு மாத்திரையை உள்ளே போட்டு கலக்கினர். அந்த கருப்பு நிறம் அப்படியே மாறி வெள்ளையாகி விட்டது. கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இந்தாளு மந்திரவாதியோ??. பின் இரண்டு சிறிய தெர்மோகூல் எடுத்து. புழக்கத்தில் உள்ள பிரபல கம்பெனியின் (மீன் மாத்திரை?!) திரவ மாத்திரையை எடுத்து ஊசியால் குத்தி ஒரு  தெர்மோகூல் மீது ஊற்றினார். பின்  அவர்கள் கம்பெனி திரவ மாத்திரையை குத்தி எடுத்து அடுத்த தெர்மொகூலில்  ஊற்றினர். இரண்டு நிமிடங்கள் கழித்து இரண்டு தெர்மொகூலையும் எடுத்து காட்டினர். பிரபல கம்பெனி தெர்மோகூல் ஓட்டையாகி விட்டிருந்தது. 'பார்த்தீர்களா?? இதை நீங்கள் உட்கொண்டால் உங்கள் வயிறும் இப்படி தான் ஓட்டையாகி விடும்' என்று எச்சரித்தனர். இன்னும் நிறைய டெமோக்கள் ஓடின. நாம் உபயோகிக்கும் முகப்பூச்சு பவுடரையும் அவர்கள் கம்பெனி தயாரிக்கும் பவுடரையும் தனித்தனி தண்ணீர் கிளாஸ்களில் கொட்டினர். முன்னது கரையவே இல்லை. பின்னதோ அழகாகக் கரைந்திருந்தது. ஒரு தேர்ந்த மந்திரவாதியின் லாவகம் அவர்களின் அனைத்து வேலைகளிலும் இருந்தது. சிறு பிசிறு கூட இல்லை. கூட்டத்தினரின் வாய் முன்னிலும் அதிகமாக பிளந்திருந்தது. டெமோ முடிந்தது. மீண்டும் அவர் பேச ஆரம்பித்தார். 'இப்போ சொல்லுங்க. இந்த பொருள் தரமானது தானே? உங்க கண் முன்னாலே டெமோ காட்டிட்டோம்.' என்றவுடன் கூட்டம் அவசர அவசரமாக ஆமோதித்தது. பொருள் ஓகே தான். ஆனா நான் கோடீஸ்வரர் எப்படி ஆகிறது என்ற என் பழைய கவலைக்கே தாவினேன். 
                கையேடு போன்ற ஒன்றை விநியோகித்தனர். அதை சிறிது மேய்ந்தேன். ஒரு இடத்தில் என் கண்கள் நிலை குத்தின. அது அப்பொருட்களுக்கான விலைப்பட்டியல். ஒவ்வொரு பொருளும் சந்தையில் உள்ள விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கும் மேல். 'டேய்!! என்னடா ரேட் இது...? இந்த விலையில வித்தா அந்த கம்பெனி ஓனர் வேணா கோடீஸ்வரன் ஆவலாம். நாம எப்படிடா ஆவமுடியும்.?' என்று நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவன் 'அமைதியா இரு' என்று சைகை செய்தான். அதற்கு மேடை மேலிருந்தவரே பதில் சொன்னார். வழக்கமாக நாம் உபயோகிக்கும் அளவில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உபயோகித்தால் போதுமாம். ஏதோ உங்க லாஜிக் சரி. அந்த கோடீஸ்வர மேட்டர்?? சுத்தி சுத்தி நான் அதிலேயே வந்து நின்றதற்கு காரணம் என் நண்பன் இந்த பொருட்கள், வியாபாரம், டெமோ என்றெல்லாம் ஏதும் சொல்லிக்கூட்டி வரவில்லை. கோடீஸ்வரன் ஆகலாம் என்று மட்டுமே சொல்லிக்கூட்டி வந்திருந்தான். 

             இப்போது மேடை நாயகர் மார்க்கடிங் பற்றிய விஷயங்கள் பேச ஆரம்பித்திருந்தார். அவர் ஒரு கால்நடை மருத்துவராம். ஆறேழு வருடங்கள் முன்பு அவர் இப்படித்தான் இரண்டு மூன்று பைகளை சுமந்து திரிந்தாராம். இப்போது கம்பெனி கார் பரிசு வென்றுள்ளாராம். (கைதட்டல்) அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டாராம். (கைதட்டல்) ஒரு தடவை டெல்லி டூர் பரிசை வென்றிருக்கிறாராம். (கைதட்டல்) இன்னும் மூன்று மாதங்களில் அவர் குறிப்பிட்ட விற்பனையை எட்டி விட்டால் சிங்கப்பூர் டூர் பரிசையும் வென்று விடுவாராம். (பலத்த கைதட்டல்). 'ஓ!! நீயி சிங்கப்பூர் போறதுக்கு தான் எங்கள கூட்டி வந்து உக்கார வச்சிருக்கியா' என்று கேட்கத் தோன்றியது. இவர் ஓடாகத்தேய்ந்து உழைத்த இந்த ஆறு வருடத்தில் நாள் ஒன்றுக்கு வெறும் நான்கு ரூபாய் சேர்த்து வைத்திருந்தாலும் (அதாவது தினம் ஒரு டீ குடிக்கும் காசு தான்) இவர் காசிலேயே டெல்லி (அதுவும் பிளைட்டிலேயே) போய் வந்திருக்கலாமே என்று கேட்க நினைத்தேன். இவர் ஒரு கால்நடை மருத்துவர். அதனால் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சேர்த்து வைப்பது என்பது சாதாரணம் தான். அவ்வாறு சேர்த்து வைத்திருந்தாலே இவர் சொந்த காசிலேயே சிங்கப்பூர் போய் வந்திருக்கலாமே என்ற சின்ன லாஜிக்கைக்கூட யோசிக்காமல் எப்படி இப்படி கைவலிக்க கைத்தட்டுகிறார்கள் என்று வியந்தேன். இவர் ஒருவர் உழைப்பிலேயே நிவர்த்தியாகி விடக்கூடிய சொகுசு, சலுகைகளை 'வெளிநாட்டுப் பொருள் விற்க ஆள் சேர்த்து விடுகிறேன் பேர்வழி' என்று ஒரு பாவப்பட்ட கூட்டத்தையே இவர் பின் சேர்த்து அவர்கள் உழைப்பில் இவர் சிங்கப்பூர் செல்வது பெருமையா?? என்றெல்லாம் யாரும் யோசித்ததாகவே தெரியவில்லை. இதில் அவர் டெல்லி போனதையும், இவரின் அப்லைன் சீனியர் ஒருவர் சுவிச்சர்லாந்து போனதையும் வீடியோ காட்சிகளாக வேறு போட்டு காட்டினார்கள். வாயில் எச்சூறியபடியே மொத்தக் கூட்டமும் கண்டு களித்தது. 'உங்களில் அடுத்து என்னுடன் யார்யாரெல்லாம் ஆஸ்த்திரேலியா வரப்போகிறீர்கள்' என்று அடுத்து அவர் கேட்ட கேள்விக்கு களிப்புடன் பலமாக கைதட்டிக் கொண்டிருந்த கூட்டத்தினரை கவனித்து பார்த்ததில் ஒன்று புரிந்தது. 
             வந்திருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் நடுத்தரமக்களே. அவர்களுக்கு எட்டாக்கனியாக, பகல்கனவாக இருக்கும் வெளியூர்/வெளிநாடு சொகுசு பயணங்களும், யாரோ உழைப்பதில் தனக்கு வருமானம் வந்து விடும் என்ற நப்பாசையும் தான் இவர்களை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபாடு கொள்ள வைக்கிறது. இவ்வளவுக்கும் பிசினஸ் விஷயம் என்று இந்த ஆள்பிடிக்கும் நெட்வொர்க்கை பற்றி மேடைநாயகர் பேச ஆரம்பித்த பிறகு, பொருட்கள் பற்றிய பேச்சை மறந்தும் எடுக்கவே இல்லை. அவர் குறிக்கோள் முழுவதுமே ஆள் பிடிப்பதிலேயே இருந்தது தெளிவாகத் தெரிந்தது. 'ஐயாயிரம் முதலீட்டில் நீங்கள் கோடீஸ்வரன்' என்பதே அவரின் அஸ்திரமாக இருந்தது.  இவர் சொல்வதை நம்பி இதில் சேர்ந்து ஆளுக்கு ஐயாயிரம் கட்டினால் கூட இந்த கூட்டத்திலிருந்து மட்டுமே கம்பெனி லாபம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை தாண்டுகிறது. இந்த ஐம்பது பேர்களில் எத்தனை பேர் திறமையாக ஆட்களை சேர்த்து விட முடியும்? எனக்கும் என் நண்பனுக்கும் பொதுவான ஒரு நண்பனை, நானும் சேர்க்க நினைப்பேன், அவனும் சேர்க்க நினைப்பான். ஒரு கட்டத்தில் saturation பாயிண்ட்டை எட்டிவிடுவோம். பின் அனைவரும் புறங்கையை நக்கிக்கொண்டு நிற்க வேண்டியதுதான். உள்ள தொழிலும் போச்சு. வேலையும் போச்சு. நம்மைப்பார்த்தாலே ஏதோ பிள்ளை பிடிக்கிறவன் ரேஞ்சுக்கு பயந்து எல்லாரும் ஓடிவிடுவார்கள். 

            ஒன்றை எல்லாரும் புரிந்து கொள்ளல் நலம். கோடீஸ்வரன் ஆகிவிடலாம் போன்ற பிரகாசமான வாய்ப்புகள் ஒருபோதும் நம் வீடு தேடிவராது. ஐயாயிரம் மட்டும் முதலீடு ண்ணினால் போதும், பின் நாம் அறிமுகப்படுத்துபவர்கள் மூலம் அது குட்டி, போட்டு குட்டி போட்டு  லட்சங்களாகவும் கோடிகளாகவும் ஆகிவிடும் என்றால்,கோடிக்கணக்கான ரூபாயை கருப்பு பணமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இதில் சேர்ந்து அவ்வளவையும் வெள்ளையாக மாற்றிவிட மாட்டார்களா?? சிட்பண்டுகள், பைனான்சுகளில் இழந்தது போக மீதமிருக்கும் பணத்தை இது போன்றவற்றில் இழந்தே தீருவோம் என்று வரிசை கட்டி நிற்கும் நடுத்தர மக்களை  என்ன  செய்வது??  இந்த MLM எனப்படும் Multi Level Marketing பற்றி பேச/எழுத/விவாதிக்க இன்னும் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. இக்கூட்டங்களுக்கு போவதோ, ஏன் இதைப் பற்றி  பேசுவதே  நேர விரயம் தான். 

வணக்கங்களுடன் 
டேவிட் 

Thursday, 19 July 2012

நானும் குழந்தை

மகளின் சேட்டைகளை சிரித்தபடி பார்த்து கொண்டிருக்கும் என்னிடம் (பாஷா ஸ்டைலில்) என் மனைவி கேட்கிறாள் 'உங்களுக்கு கோபமே வராதா...?'