அடியேன்

Sunday, 24 November 2013

கிராமத் தேனிலவு (2)


கிராமத் தேனிலவு - பாகம் 2



...
முக்கூடல் தாண்டினதும் சொன்ன மாதிரியே கொஞ்சம் சுமாரான ரோடு தான். எனக்கு இந்த ரோடு ஞாபகம் வந்துவிட்டது. இனி வழி தெரியும் என்று நினைக்கிறேன்.
      பதினைந்து நிமிடங்களில் பாப்பாங்குளம் . ரெண்டாவது ஸ்பீடு பிரேக்கரில் வலது பக்கம் திரும்பினால் செல்லப்பிள்ளையார்குளம் விலக்கு. அதற்கு முன்பு ஒரு தியேட்டர் இருக்குமே!!. இருக்கிறது. கூரை வேய்ந்திருந்த தியேட்டர் இப்போது ஆஸ்பஸ்டாஸ் போர்த்தியிருந்தது. சிறுவயதில் என் சித்தப்பாவுடன் இந்த தியேட்டருக்கு வருவேன். மோகன், கமல், ரஜினி, விஜயகாந்த் என்று பிரதானமாக போட்டிருக்கும் சின்ன போஸ்டர்களை சித்தப்பா பார்க்கவே மாட்டார். தியேட்டர் முன்பு ஒட்டியிருக்கும் ஒரே ஒரு பெரிய கலர் போஸ்டரை தான் பார்ப்பார். பாலசந்தர் படமா? பாரதிராஜா படமா? நல்லாருக்கும் என்பார். புரியாது. “யாரு சித்தப்பா அவங்கல்லாம்” என்றால் அவங்க தான் போட்டோ புடிக்கிறவங்க என்பார். எந்தப் படமானாலும் அந்தப் போஸ்டர்களில் தவறாது இடம்பிடிக்கும் வாசகங்கள் “ஈஸ்ட்மென்ட் கலா் அல்லது புத்தம் புதிய காப்பி” அல்லது ”பாட்டு பைட் சூப்பா்”

      செல்லப்பிள்ளையார்குளம் விலக்கில் ஒரு ஓடை உண்டு. இறங்கிப் போகவேண்டும். இப்போது பாலம் இருக்கிறது. இந்தப்பக்கம் அடிக்கல் நாட்டிய கட்சியின் கல்வெட்டு, அந்தப்பக்கம் பாலம் திறந்த கட்சியின் கல்வெட்டு. ரெண்டில் ஒன்றை எடுத்தாலும் உடையப்போவதென்னவோ பாலம்தான். அதனால் இரண்டையுமே விட்டு வைத்திருந்தார்கள். புதிதாக ஆட்டோ இரண்டு நின்றது. முன்பு இங்கு இறங்கி நாலு கி.மீ கள் நடப்போம். ஒரே ஒரு பெட்டிக்கடை உண்டு. பாதி நேரம் திறந்திருக்காது. இப்போதும் கொஞ்சம் பெரிய பெட்டிக்கடை ஒன்று இருந்தது.

வாய் நமநமவென்றிருந்தது

“கிங்ஸ் இருக்கா?”

”அப்டீன்னா?”

”வில்ஸ்?”

”பஞ்சு வச்ச சிகரட்ட கேக்குறீங்களா? அதெல்லாம் நடுத்தெரு மூக்கண்ணன் கடையில தான் சார் இருக்கும். பட்டாளத்தார் நிதம் அங்கென வாங்குவாருன்னு அவந்தான் வாங்கி வச்சிருப்பான். இங்கென பீடி மட்டும் தான். முன்னாடி சிசா்ஸ் பில்டர் வச்சிருந்தேன். யெல்லாம் கடனுக்குத்தான் வாங்கி வளிக்கானுவோ. அதான் இப்பெல்லாம் வாங்கி வைக்கிறதில்ல. சார் எங்கிட்டு போறீக?”

ஒரு வார்த்தைக்கு பத்து நிமிடம் பேசுவான் போல
“அனைஞ்சநாடானூா்”

”நடுத்தெரு தாண்டி தான் போவணும். அங்கனயே வாங்கிக்கோங்க”

ஏதோ இந்தமட்டடில் ஒரு கடையிலாவது இருந்ததே. நடுத்தெரு மூக்கண்ணன் (சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள். அவர் போட்டிருக்கும் கண்ணாடி மூக்கின் உதவியிலேயே நின்றிருந்தது) கடையில் மூன்று கிங்ஸ் மட்டும் இருந்தது.

”மீதிக்கு சிசர்ஸ் பில்டர் வச்சிரட்டுமா”

“வேணாம் போதும், போதும்” என்றேன்

”தம்பி எங்கே போறீய?”

”அனஞ்சநாடானூா் பக்கத்தில கூந்தப்பனைபட்டி. ஏன் கேக்குறீங்க?”

”இல்ல பிளசர் கார்ல வந்துருக்கீயளே, அதான். சொந்த ஊரு எதுவோ?”

”சொந்த ஊர் இதுதான். ரொம்ப வருஷம் கழிச்சு வா்றேன்”

”ஓ… அங்கன யாரு மயன்டே?” என்ற அவரின் கடைசி கேள்வி காதில் கேட்காதவாறு நகர்ந்தேன். ஒன்று சஞ்சனா காரில் வெயிட்டிங். இன்னொன்று பசிக்க ஆரம்பித்திருந்தது. காலையில் மதுரையில் சாப்பிட்டது.

“வாட்ஸ் நெக்ஸ்ட்“ என்றாள் சஞ்சனா

”ம்ம்.. ஊரு பக்கம் தான், ஃபைவ் மினிட்ஸ் டிரைவ் ஒன்லி” என்றவாறு சிகரட்டை முடித்துவிட்டு காரை நகர்த்தினேன்

ஐந்து நிமிடத்தில் ஒரு மஞ்சள் பலகை வரவேற்றது. “அனஞ்சநாடானூா் ஊராட்சி அன்புடன் வரவேற்கிறது” இத்தனை வருடங்களில் ஒரு தடவை பெயின்ட் அடித்திருக்கலாம். துரைசாமி வீடு என்று விசாரிக்க வேண்டும். அப்பாவின் நண்பா் . சித்தப்பா, பெரியப்பா இருவரும் உண்டு. ஏனோ அவர்கள் வீட்டில் தங்கச்சொல்லி அப்பா இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கவில்லை. “போய் பாக்கிறத பாரு,  ஆனா தொரசாமி வீட்டில தங்கிக்கோ, நான் அவனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்“ என்று சொல்லியிருந்தார்.

சஞ்சனா முகத்தில் ஒரு மெல்லிய பயரேகை ஓடியதைக் கவனித்தேன்
“வாட்ஸ் ராங் வித் யு சஞ்சு”

”நத்திங்.. ஆனா இந்த ரோடெல்லாம் ஏன் இப்பிடி குண்டும் குழியுமா கல்லா இருக்கு. எப்படி இதுலல்லாம் டிராவல் பண்றாங்க..” என்றாள்

”அது நான் பொறந்து வளந்த காலத்திலே இருந்து அப்பிடித்தான் இருக்குது” என்றேன்

அப்பா போட்டுக்கொடுத்த மேப் மனதிலேயே இருந்தது. ஊர் நுழைந்தவுடன் ஒரு பெரிய வாட்டர் டேங்க். அதற்கு அடுத்த தெருவில் இடதுபக்கம் திரும்பி பத்து வீடு தள்ளி வலதுபக்கம் கல்சுவா் வீடு. இதாய் தான் இருக்க வேண்டும். கண்ணாடி இறக்கி

”இந்த துரைசாமிங்கிறவா் வீடு…?”

வீட்டின் வெளியே பீடி சுற்றிக் கொண்டிருந்த நான்கு பெண்களில் இருவா் கோரஸாய்
”இந்த வீடு தான்” என்றனா்

அந்த அணியில் வயது குறைந்த சில்வண்டு ஒன்று தட்டை கீழே வைத்துவிட்டு ”அன்னக்கிளியக்கோவ்!! உங்க வீட்டுக்கு விருந்தாளிக வந்திருக்காக. பிளசர் காருல… அன்ன்கிளியக்கோவ்.. யக்கோவ்!!” என்றபடி உள்ளே ஓடியது. சஞ்சனா இறங்கி என் கையை இறுகப்பிடித்தபடியே வந்தாள்.

உள்ளிருந்து வந்தவா் தாம் அன்னக்கிளியாக இருக்க வேண்டும்

”வாங்க வாங்க… அவக சொல்லிட்டுத்தான் போனாக. வருவீகன்னு.. தோடத்துக்குத்தான் போயிருக்காக. உக்காருங்க. மோர் எடுத்துட்டு வரேன்”

”ஏ புள்ள வசுமதி!! மாமா எலுமிச்ச காட்டுல நிப்பாக. இவுக வந்துட்டாங்கன்னு சொல்லிட்டு வா… போ!!”

சஞ்சனா வீட்டைப் பார்த்து பீதியின் உச்சத்துக்கே போய்விட்டாள். நுழைந்ததுமே இடப்பக்கம் மாட்டுத்தொழுவம். நான்கு பசுமாடுகள் . எதிரில் இரண்டு காளை மாடுகள். வலப்பக்கம் நீள வராந்தா. வயர்பின்னிய சோபாக்கள் இரண்டு. சுவற்றில் ஒரு “நடிகர் எம்ஜியார்” “ஒரு அரசியல்வாதி எம்ஜியார்”. சிறியதும் பெரியதுமாய் நான்கைந்து குடும்ப போட்டோக்கள். தனியாய் க்ளோசப்பில் பெரிய மீசையை ஊசியாய் திருகி ஒருவரின் போட்டோ. இவரைப் பார்த்திருக்கிறேன். ஓ!! இவர் தான் துரைசாமியா? சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவார். அப்பாவும் இவர் வந்ததும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

அதற்குள் வாசலில் கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. மோர் கொண்டுவந்தார் அன்னக்கிளியக்கோவ்.

”யாரு கிளி இது? ஊருக்குப் புதுசா இருக்கு” வாசலில் இருந்து ஒரு பெரிசு கேட்டது.

“தினேசு அப்பாவோட சேக்காளி மயனாம்.. டெல்லில இருந்து வந்திருக்காக. அம்மூர்க்காரவுக தான்..”

சஞ்சனா காதில் கிசுகிசுத்தாள். ”ஹு இஸ் தட் தினேஷ்”

“துரைசாமியோட பையனா இருக்கும். கிராமத்தில் ஹஸ்பெண்ட் பேர சொல்லமாட்டாங்க. அதான் தினேஷ் அப்பா, சேக்காளி மீன்ஸ் ஃபிரண்ட் ஓகே!?” என்றேன். இனி நான் சஞ்சனாவுக்கு முழு நேர டிரான்ஸ்லேட்டர் போல..

”என்ன சோலியா வந்திருக்காகளாம்..” அடுத்து கேள்வி

”சும்மே தான்.. ரெம்பநாளா வல்லேன்னு பாக்க வந்திருக்காக..”

அவர்களே பேசிக்கொண்டு இருக்கும் வரை பிரச்சினையில்லை என்றே தோன்றியது. வெகுநாள் கழித்து கிராமம் வரும் போது முதல் பிரச்சினை உறவுமுறை. கிராமத்தில் கிட்ட்தட்ட எல்லாருமே சொந்தக்காரர்கள் தான். யார் என்ன உறவுமுறை என்று தெரியாது. சும்மா ”என்னண்ணே..” என்று குன்சா அடிக்கவும் முடியாது. ”மொறதப்பி கூப்பிடுது பாரு பயவுள்ள..“ என்று திட்டியும் விடுவார்கள்

”பாத்துகிட்டே இருக்கீக.. மோர் சாப்பிடுங்க” – அன்னக்கிளியக்கோவ்

”ஆஅங்..” என்றபடி மோர் செம்பை கையில் எடுத்துக்கொண்டேன். தம்ப்ளரில் உள்ளதை சஞ்சனா எடுத்துக்கொண்டாள். ஸ்ட்ரா இருக்குதா? என்று பார்வையாலே கேட்டது போன்றிருந்தது. நிச்சயம் அண்ணாந்து குடித்தால் கொட்டிவிடுவாள். சிரி்த்துக்கொண்டே நான் குடிக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக இரண்டு வாய் குடித்து விட்டாள். மூன்றாவது வாய் குடிக்கப் போகும்போது

”வாங்க வாங்க.. அப்பவே வந்துட்டியளோ!!” இடிமுழக்கமாக உள்ளே வந்தார் துரைசாமி

அவர் போட்ட சத்தத்தில் கொட்டியே விட்டாள் சஞ்சனா. அவளைப் பார்த்து எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் பாவமாகவும் வந்தது.

”பாத்து ..பாத்து.. கொட்டிட்டீயளா?? யே!! கூவக்கழுத.. புதுசா வந்த ஆளுவளுக்கு மொன இல்லாத தம்ளலர்லயா மோர் குடுப்ப..??”

துடைத்துக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பினாள் சஞ்சனா

”உங்கப்பாரு நேத்தே போன் போட்டுச் சொல்லிட்டான். வருவீகன்னு.. அப்புறம் வேலசோலில்லாம் எப்பிடி போய்கிட்டு இருக்கு?”

”நல்லாருக்கு…” என்றேன்

”வராமலே இருந்துக்கிட்டீகளே!! எத்தன வருஷம் இருக்கும் வந்து..” என்றார்

”ஒரு இருபது வருஷம் இருக்கும்” என்றேன்

”ஏயெப்பா… ஹாஹா” இடிமுழக்கமாக சிரித்தார்.  ”உங்கள சின்னப்புள்ளையில பாத்தது. என்னமா வளந்துட்டீய.. டவுசர் போட்டுகிட்டு, எண்ணெய் வச்சு தலை சீவிகிட்டு.. ஹாஹாஹா” மீண்டும் இடிமுழக்கம். சஞ்சனா என் கையை பிடித்துக்கொண்டாள். இவர் நோக்கம் சஞ்சனாவை பயமுறுத்துவதா?

ஒரு இருபது நிமிஷம் பழைய கதை ஓடியது. இடையில் சில கேரக்டர்கள் என் ஞாபகத்தில் வந்து வந்து போயின.

முக்கியமாக முருகாயி அத்தை

என் தந்தைக்கு தங்கை முறை. திருமண வயது தாண்டியும் ஏனோ எந்த வரனும் கைகூடாமலே இருந்தது. அப்போதெல்லாம் முழுநேரமும் அவர்கள் வீட்டிலேயே தான் போய்க்கிடப்பேன். பல்லாங்குழி, தாயக்கடடம், பாம்பு ஏணி இன்னபிற விளையாட்டுக்கள் அனைத்தும் சொல்லித்தந்தது அவள் தான்.

”நீ எப்போ அத்தை கல்யாணம் பண்ணிக்குவே?” என்றேன் ஒருநாள்

”ஏன் கேக்குறே?” என்றாள்

”நீ போயிட்டியானா நானு ஆரு கூட விளாடுறது..”

”இப்போதைக்கு இல்லடா… நீதான் நவட்டணும் . விளாடு..” என்பாள்

நான்தான் அத்தைக்கு எல்லாமே. கடைக்குப்போவது. விளையாடுவது என்று. அவள் ஏதாவது வித்தியாசமாய் பண்டம் செய்தால் கூட முதலில் எனக்குத்தான் தருவாள், அத்தை வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வாத்தியாரு முருகேசு குடியேறும் வரை. பின் அவளுக்கு என் மீதான நாட்டம் ஏனோ குறைந்தது. நானாக விரும்பிப் போனாலும் ”வீட்டில் உங்கம்மா தேடுவா. போ” என்று சப்பை காரணம் காட்டி விரட்டவே முனைவாள். ”ம்ம்… அதெல்லாம் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்” என்பேன், அவள் சொல்ல வருவது புரியாமல். அந்த வாத்தியாரு முருகேசு திருமணமானவனாம். இந்த ஊருக்கு மாத்தலாகி வந்ததால் மனைவியை ஒரு மாதம் கழித்துக் கூட்டி வருவாராம். எனக்குத் தெரிந்து அவர் ஆறு மாதங்களாகியும் மனைவியைக் கூட்டி வந்தபாடில்லை. இந்த விஷயங்கள எல்லாமே அத்தை சொல்லித்தான் தெரியும். ஏன் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

      ஒருநாள் வழக்கம்போல் அத்தை வீட்டிற்குப் போனபோது முன்கதவு சாத்தியிருந்தது. கதவு சாத்தியிருந்தால் பாட்டி வயலுக்கு போய்விட்டாள். அத்தை தூங்கிக்கொண்டிருப்பாள் என்றர்த்தம். அவ்வேளைகளில் பின்கதவு வழியாக உள்நுழைந்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் பின்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுவிட்டேன். கட்டிலில் அத்தை படுத்திருந்தாள். ஆனால் கூடவே வாத்தியார் முருகேசும் படுத்திருந்தான். அவர்கள் இருந்த நிலையும், கலைந்திருந்த அவர்களது ஆடையையும் பார்த்த எனக்கு ஏதேதோ தோன்றியது. ஆனால் நல்லதாக ஒன்றும் தோன்றவில்லை. சட்டென்று வெளியே ஓடிவிட்டேன். ”டேய் பன்னீஈஈரு…” அத்தை கூப்பிடுவது கேட்டதும் ஓட்டத்தின் வேகம் அதிகரித்தது.

      ஆனால் அம்மாவிடம் இதைச்சொன்னால் அடிப்பார்கள் என்று தெரியாது. ”இனி அங்க போவியா.. போவியா..”

      அன்று சாயந்திரம் அம்மாவும் அப்பாவும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பற்றித்தான் இருக்கவேண்டும்.

”வக்காளி!! அவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்..” என்று அடிக்கடி அப்பா கர்ஜித்தார்

”விடுங்க. எதுன்னாலும் வெளிய தெரியாம செய்ங்க..” என்றார் அம்மா. சட்டையை மாட்டிக்கொண்டு அப்பா வெளியே சென்றார். அதன் தொடர்ச்சியாக இரண்டொரு நாட்களில் வாத்தியார் முருகேசு ஊரைவிட்டே போய்விட்டார்.

      அத்தனை நாட்களாக கல்யாணம் ஆகாமல் இருந்த அத்தைக்கு மூன்றாம் நாளே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரவிலேயே திருமணம் ஆனது. நானும் போயிருந்தேன்

      மாப்பிள்ளை ஒரு மாதிரி விந்தி விந்தி நடந்து வந்தார்…

(தொடரும்…)


4 comments:

  1. நல்லாருந்தது எதுக்கு தொடரும் போட்டு இருக்கீங்கனுதான் புரியல இத இடத்துலயே ரசனையான் முடிவு இருக்கு பரவால அடுத்த க்ளைமேக்ஸ்க்கு வெய்ட் பண்ணுவோம் :)

    ReplyDelete
    Replies
    1. எழுதிப் பழகணுங்கிறதுக்காக எழுத ஆரம்பிச்சது. கருன்னு எதும் இல்ல. சும்மா தோணினதெல்லாம் கோர்த்து எழுதிட்டிருக்கேன். :-)

      Delete
    2. எழுதிப் பழகணுங்கிறதுக்காக எழுத ஆரம்பிச்சது. கருன்னு எதும் இல்ல. சும்மா தோணினதெல்லாம் கோர்த்து எழுதிட்டிருக்கேன். :-)

      Delete
  2. ரொம்ப நல்லா இருக்கு, கதை சொல்லும் விதம். இந்திரன் சொன்னா மாதிரி, இங்கேயும் முடித்திருக்கலாம். ஆனால் சுவாரசியத்தைக் கூட்டி இருக்கிறீர்கள், waiting :-)

    amas32

    ReplyDelete