அடியேன்

Saturday, 15 February 2014

மழைத்துளி சாகவில்லை




மழைத்துளி சாகவில்லை




ஒரு மழை நாளின் மாலையில் நீயும் நானும்...
காலாற பேசிக்கொண்டே..
சட்டென்று சாரலின் முதல் துளி உன்  மேலும், பின் என் மேலும்.

//ஒதுங்கிப்போம்டா//

ஒண்டுவதற்கு ஒரு காரணமும் நிழற்குடையும் கிடைத்தது. உட்கார சிறு இடமும். ஈரமாயிருக்கிறது என்று இன்னும் நெருங்கி உட்கார்ந்து கொண்டேன். சாரல் முடிந்தவரை உள்நுழைந்து குளிர வைக்கப் பார்த்தது. உன் நெருக்கம் அதை விரட்டிக் கொண்டிருந்தது

//காலையில திடீர்னு ஒரு போன். லீவ் போடுன்னு. முந்தின நாளே சொல்ல வேண்டாமா?//

உள்நுழைந்த சாரல் துளிகள் உன் கூந்தலில் நிரம்பிக்கொண்டிருந்தன

//எப்ப பாத்தாலும் கடைசி நேரத்தில சொல்லாதேன்னு எத்தன வாட்டி சொல்றது//

பின் ஒன்றோடொன்று இணைந்து ஒரு பெருதுளியாய் மெதுவாய் கீழ்நோக்கி பயணித்தது

//போனவாரம் உன் பிறந்த நாள்னு லீவ் போட்டாச்சு. இன்னிக்கும் லீவு.. அந்த நாலுமுடி மண்டையன் என்ன சொல்வானோ நாளைக்கு//

உன் கூந்தலின் ஒவ்வொரு முடியாய் தாவி, கலைந்திருந்த உன் கேசத்தினூடே வளைந்தும் நெளிந்தும் வழி தப்பித் திரிந்து கொண்டிருந்த அந்த மழைத்துளியைக் காண அவ்வளவு அழகாகவும் கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.

//அப்பாவுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருச்சு போலடா. யார்னா சொல்லிருப்பாங்ன்னு நினைக்கிறேன். அம்மா கிட்ட சொல்லிருக்காரு, சீக்கிரம் இவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு..//

ஒரு வழியாய் கீழிறங்க வழி கிடைததுகிட்டது அதற்கு. உன் காதுகளின் மேல்கால் பதித்து நின்று ஒரு நொடி பெருமூச்சுவிட்டு, பின் சரேலென்று கீழ் நகர்ந்தது. இலக்கிருப்பதாய் தெரியவில்லை. ஏதோ அதற்கு ஒரு தேடல் உன்னிடம்.

//இதுல சொந்தக்காரனுங்க இம்ச வேற.. எந்த கல்யாணத்துக்கு போனாலும் “என்ன பாண்டுரங்கம், பொண்ணோட கல்யாண சாப்பாடு எப்ப போடுவீங்க..“ன்னு லூசுத்தனமா எவனாச்சு கேட்டுா்றான். அடுத்த நாளே எதாச்சு ஒரு ப்ரோக்கர் காலிங் பெல் அடிச்சுர்றான்..//

மழைத்துளிக்கு மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு வேகம் எதற்கு? ஊர்ந்து செல்வது தானே. கொஞ்சம் நீளவாக்கில் காதுகளில் இறங்கிய துளி, பின் மீண்டும் ஒரு உருண்டையாகும் வரை தன்னை மெதுவாய் ஆசுவாசப்படுத்திக்கொண்டது. காதுகளில் உனக்கு கூச்சம் அதிகம். எங்கே அதை தட்டி விட்டுவிடுவாயோ என்று நினைத்தேன். தப்பித்துவிட்டது.

//போன வாரம் வந்த ப்ரோக்கர் அப்பிடிதான். கிட்டத்தட்ட நிச்சயமே பண்ணிருவான் போல. எங்கப்பாவும் அவன் சொன்ன எல்லாத்துக்கும் ஓபிஎஸ் மாதிரி தலையாட்டிக்கிட்டு இருந்தாரு. ஒவ்வொரு நாளும் திக் திக் ன்னு இருக்குடா//

ம்ம்ம... இனிதான் உனக்கு சோதனை. வெகுநேரம் காதில் நின்ற அந்த துளியின் காதில் சொன்னேன். குதித்துத் தான் ஆகவேண்டும். ஆனால் சரியாய் குதிக்க வேண்டும். இல்லையென்றால் சிதறிப்போகும். திடீரென்று கேசத்தினுள் இன்னுமொரு துளி, அதே வழியில். அடடா இனி தாமதிக்க முடியாது. என்ன நினைத்ததோ சட்டென்று காதிலிருந்து தோளுக்கு குதித்துவிட்டது. ச்சே ஆனால்..

//ஹும். உன்கிட்ட சொல்றதுக்கு பதிலா அந்த குப்பத்தொட்டிகிட்ட சொல்லலாம். நானும் 2 வருஷமா தலையா அடிச்சிக்கிறேன். எதாச்சு உருப்படற வழியப் பாருடான்னு. உன் காதுலே ஏற மாட்டேங்குது. பாரு ஒரு நாளைக்கு சொல்லாம கொள்ளாம உன் வீட்ல பொட்டியும் கையுமா வந்து நிக்கப்போறேன். அன்னிக்கு தெரியும். ஒரு பிசினச ஒழுங்கா பாருன்னா கே்கிறியா. மூணு மாசத்துக்கு முந்தி நீ சொன்ன பிசினசுக்கும் இன்னிக்கு நீ பண்ற பிசினசுக்கும் கொஞ்சமாச்சும் சம்பந்தம் இருக்கா.//

அனுபவமில்லாத மழைத்துளி போல. லாவகமாக குதிக்கத் தெரியவில்லை. விழுந்த வேகத்தில் சிறிய பகுதி சிதறிப்போய்விட்டது. விழுந்தது எழுந்திருக்கவேயில்லை. அவ்வளவுதானா. இல்லை. கொஞசம் மூச்சு விடுகிறது. ஆனால் நகரவேயில்லை. அதெப்படி நகரும். அவள் கழுத்தில் முகம் வைத்தால் என்னாலே நகர்த்த முடியாது. முன்பு ஒரு அரையிருட்டில் அவள் தோளில் சாய்ந்து கொண்டேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. சாய்ந்து கொள்ள ரொம்ப வாகாக இருக்கும் அவள் கழுத்து. என்னவோ ஒரு மணம், கிறக்கும். எழும்ப மனம் வராது. மழைத்துளி எம்மாத்திரம்.

//எப்பவாச்சு சீரியஸா பேசுறியா? அதுவுமில்ல.. எதோ முக்கிய வேலையிருக்குன்னு நேத்து சாயந்திரம் சீன் போட்டே. நைட் என்னாச்சுடா, சக்சஸா? ன்னு கேட்டா பே“ன்னு முழிக்கிற. சரவணன் கூட பீர் அடிக்கப் போறதுக்கு என்கிட்டேயே பொய் சொல்லிட்டு போற. அவன மொதல்ல சாத்தணும். கல்யாணத்துக்கு பிறகு வச்சிக்கிறேன். வீட்டுக்கு வருவான்ல். அப்ப இருக்கு அவனுக்கு//

எழும்ப திராணியுமில்லை. தொடர்ந்து வந்த துளி சூதானமானது போல. லாவகமாக குதித்தது. கை கொடுத்து பழைய மழைத்துளியை தூக்கியது. ஆஹா.. சேந்துட்டாங்களா. எந்தப் பக்கம் இறங்குவது என்று பேச்சு வார்த்தை நடக்கிறது போல. பின்பக்கம் இறங்க மிகுந்த லாவகம் வேண்டும். எதிர்பார்த்த மாதிரியே முன்பக்கம் இறங்க ஆரம்பித்தது. எங்கள் ஊர் மலையுச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு ஏறும் வழி செங்குத்தானது. ஏறும் போதும் இறங்கும் போதும் படிஓரத்தில் உள்ள கயிறு ஒன்றை பிடித்தபடியே தான் நடக்கவேண்டும். இந்த மழைத்துளி எவ்வளவு விவரம் பாருங்கள்.

//ஒரு நாள் கீதா கூடபேசிகிட்டிருந்தேன்னு உன் போன எடுக்க கொஞ்சம் லேட்டானதுக்கு, இன்னிக்கு வரைக்கும் அவள என்னல்லாம் சொல்றே. போண்டா மூக்கி, குள்ளப்பண்ணின்னு. அவ என்னோட 10 வருஷ ஃபிரண்டு//

கப்பென்று அவள் செயினை பிடித்துக்கொண்டது. இனி வழியும் விலகாது. பாதையும் வழுக்காது. மெதுவாய் இறங்க ஆரம்பித்த மறுநொடி அவள் கழுத்தின் கீழ் ஆங்காங்கே சேர்ந்திருந்த சிறு சிறு துளிகள் ஆரவாரிக்க ஆரம்பித்தன. சத்தம் கேட்டு அவள் ரோமக்கால்கள் விழித்து எழுந்தன. புல்லரித்துப் போனது, எனக்கும்..

//உன்கிட்ட ஒண்ணு கே்கணும்னு நெனச்சேன். உன் ரிலேஷன் பொண்ணு, அது யாரு? எதோ சின்ன வயசில இருந்தே உன்னையே நினைச்சிக்கிட்டிருக்கான்னு அடிக்கடி சீன் போடுவியே..//

கீழிறங்க கீழிறங்க எனக்கு ஏதோ பண்ணியது. அது யாரையும் கண்டுகொள்ளவில்லை. ஆரவாரங்களுக்கு மத்தியில் ஏதோ ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற செல்லும் ராஜகுமாரன் போல சென்றுகொண்டிருந்தது, பாதி செயின் தாண்டி சுடிதாரின் பார்டருக்கு அருகில்.

//இப்ப சென்னைல தான் இருக்கிறா, சொந்த ஊர் கும்பகோணமோ எங்கியோன்னு சொல்வியே//

சிறிது நேரத்தில் சாகப்போகும் அந்த மழைத்துளியின் கண்களில் தான் என்ன ஒரு பரவசம். சொர்க்கம் நோக்கியல்லவா செல்கிறது. இன்னும் அரை நொடியில் இருட்டு பிரதேசத்தில், ஒரு விநோத மணம் வீசும் பரவச பள்ளத்தாக்கில், மேகத்தின் மென்மையை மட்டுமே இதுவரை கண்டிருந்த அந்ததுளி மென்மையின் உலகத்துள் நுழைகிறது. கால்நொடியில் மழலையாகப் போகிறது.

//அவ பேர் என்ன?//

பிரசவ இறுதியில் வெளிச்ச உலகை காணும் ஓர் சிறு உயிரைப் போல் மிக மெதுவாய் இருளுக்குள்  நுழைந்தது
கடைசி நொடியில் திரும்பி அது என்னைப் பார்த்தது “என்ன பாக்கிறே“ என்பது போல் இருந்தது
உரக்க சொன்னேன்

“பொறாமை“

//சீச்சி பொறாமைலாம் இல்லடா. சும்மா கேட்டேன்//  


-----





2 comments:

  1. its really nice..... touching...girls are damn possessive....

    ReplyDelete
    Replies
    1. Hey Uthra... hw r u. Shock n surprise . :)

      Delete